செவ்வாய், 31 மார்ச், 2020

அப்(பப்)பா...

ஜோசஃப் ஒரு தோற்றுப் போன இசைக் கலைஞன். அதனாலேயே தன்னுடைய புதல்வர்கள் பெரும் இசைக் கலைஞர்களாக வர வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். இதற்காக ஜோஸஃப் தன் மகன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நடனத்தில் ஒரு அடி பிசகினாலும் பெல்ட்டால் அடித்தார். அந்தச் சிறுவர்கள் அவரைப் போலவே இசையில் அதீதமான திறமையைக் கொண்டிருந்தும் அவர் கடுமையான பயிற்சி அளித்து வந்தார்.

இசையிலும் நடனத்திலும் தான் கொடுக்கும் கடும் பயிற்சிகளுக்காக ஜோஸஃப் தன் மகன்களை மற்ற பையன்களைப் போல் விளையாட அனுமதிக்கவில்லை. ஓய்வெடுக்க விடவில்லை. இரவும் பகலும் எந்நேரமும் பயிற்சியிலேயே அவர்களை ஈடுபட வைத்தார்.


அவரது மகன்கள் நால்வரும் நடனம், பாடல் மற்றும் இசைக் கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது கடைசி மகனை மட்டும் ஜோசஃப் தங்கள் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘நீ சிறுவன் ’ என்று சொல்லி மறுத்து விடுகிறார். அப்போது  அவன் வயது நான்கு. பிறகு ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் அவன் முதல் பரிசு வாங்கியதும்தான் அவனையும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். அதுவும் பாடகனாக அல்ல; ட்ரம்ஸ் வாசிப்பவனாக. பிறகு ஏழு வயதில்தான் மேடையில் தங்களது இசை குழுவில் பாட ஆரம்பித்தார்.

ஏழு பிள்ளைகளும் மனைவியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேருக்கு ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வாழ்ந்தபடி தன் பிள்ளைகளின் இசைப் பயிற்சிக்காகவும், பிறகு அவர்களைக் கொண்டு தான் அமைத்த  இசைக்குழுவுக்காகவும் ஒருமுறை பெரும் அளவிலான இசைச் சாதனங்களை வாங்கி வருகிறார் ஜோசஃப்.

”நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டு சண்டை பிடிக்கும் மனைவியின்  ஆட்சேபணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, தன் குழந்தைகளின் இசைக் குழு நாடெங்கும் பிரபலமாக வேண்டும். அவருடைய கனவு  இசைக் குழு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நிறைவேறி விடுகிறது. தாங்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் பரிசுகளைக் குவிக்கிறார்கள் ஜோஸஃபின் குழந்தைகள். 


ஒன்பது வயதிலேயே கடைசி மகனுக்கு ஒரு பிரபல பாடகனுக்குக்கு உரிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. இதற்கு அவனது திறமை தவிர, ஜோஸஃபின் இடைவிடாத உழைப்பும், தன் குழந்தைகள் மீது அவர் வைத்த தீவிர நம்பிக்கையும்தான் காரணம்.

அதனால்தான் அப்போது உலக அளவில் முன்னணிப் பாடகியாக இருந்த டயானா ராஸ் ஒன்பதே வயதான அந்த சிறுவனுடன் மேடையில் ஒன்றாகப் பாடினார். அவனது வாழ்க்கையில் நடந்த அந்த மிக முக்கியமான சம்பவம் உலகின் பிரசித்தி பெற்ற இசை அரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில் (நியூயார்க்) நடந்தது. அவர்களது இசை குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டவரும் டயானா ராஸ் தான்.


16 வயது முதல் சோலோவாக ஆல்பம் தயாரித்து வந்தார். இவருடைய உச்சம், 1982ல் அதாவது தன் 24 வயதில் வெளியிட்ட த்ரில்லர் ஆல்பம். இன்று வரை உலகில் அதிகம் விற்கப்பட்டு கின்னஸில் இடம்பிடித்த இசை ஆல்பம். 6.5 கோடி காப்பிகள். அவருடைய அத்தனை ஆல்பங்களும் இதுவரை 20 கோடி காப்பிகள் விற்றுள்ளன (1700 கோடி ரூபாய்க்கு விற்பனை). எந்த இசைக் கலைஞனாலும் எட்ட முடியாத சாதனை இது.

தனது பிராண்ட் பெயர் மூலமாக அவர் சம்பாதித்தது 2500 கோடி ரூபாய். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் வருடத்துக்கு 250 கோடியை மிக எளிதாக சம்பாதித்து வந்தார். 


ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக அவர் இழந்தது மிகவும் அதிகம். “இரவு இரண்டு மணிக்கு என் அப்பா எங்களை எழுப்புவார். மூன்று மணிக்கு ஏதாவது ஒரு க்ளப்பில் இசை நிகழ்ச்சி இருக்கும். இப்படி எல்லா அமெரிக்க நகரங்களிலும் பாடி இருக்கிறேன். அப்போது என் வயது ஏழு இருக்கும்” என்கிறார் மைக்கேல் ஜாக்சன்.


சனி, 28 மார்ச், 2020

வீராதி வீரன்

இளவயதிலேயே தன் அப்பாவை போல திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் அந்த சிறுவன். ஆனால் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடு தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார். அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே ஒரு ரெஸ்டாரண்டில் சர்வராக வேலை பார்த்தார்.

அந்த காலகட்டத்தில் சீனர்கள் அல்லாதவர்களுக்கு சீன தற்காப்பு கலைகள் சொல்லிகொடுப்பது கிடையாது. அதை உடைத்து புரூஸ்லீ அனைவருக்கும் குங் ஃபூ சொல்லிக்கொடுத்தார்.
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசிர்யர் அல்லாத நீ ஏன் குங் ஃபூ சொல்லித் தருகிறாய்?" என்று கேட்க, "கலை எல்லாருக்கும் பொதுவானது தானே" என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார்.


"அப்படியில்லை! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும்? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் ஃபூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீ வென்றால் நான் குங் ஃபூ என்கிற பெயரைக் கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன்! என்னோடு சண்டையிடு" என்றார் அவர். இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங் ஃபூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார்.

ஆனால், அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்க செய்தது. தானே இன்னும் பல மாற்றங்களை செய்து Jeet Kune Do என்ற புது கலையும் அறிமுகபடுத்தினார்.


ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான். ஆனால் அவர் அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி?" என்று கேட்ட பொழுது, "நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன்!" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.

எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். தற்காப்பு கலையை திரையுலகில் அறிமுகம் செய்து அதனை உலகெங்கிலும் பரவச் செய்தார். 90களில் இவரைப் பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது.

இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லீ ஜுன்-ஃபன். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் லீ எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.

வெள்ளி, 27 மார்ச், 2020

கதை கதையாம் காரணம்

இங்கிலாந்து நாட்டில் பிறந்த அந்த பெண்ணுக்கு, சின்ன வயதிலேயே புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரது எழுத்து ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வழிகாட்டினர். ஆனால்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் நிராகரிக்கப்பட்டார். அவமானத்தில் கூனிக் குறுகிப்போய், வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பல நாட்கள் தவிர்த்தார்.

பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட அவர், எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தயாரானார். தனக்குள் இருந்த எழுத்தாற்றல் ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கியம் படிக்க அவருக்கு அதிக ஆசை. தனது ஆர்வத்தை அவர் தயங்கியபடி சொன்னபோது, ஏழ்மையான பின்னணி கொண்ட அவரது பெற்றோர், ‘‘ஆங்கில இலக்கியம் சோறு போடாது. பிரெஞ்சு மொழி படித்தால் ஓர் அலுவலக உதவியாளர் வேலையாவது கிடைக்கும்’’ என்று வாதிட்டனர்.


வேறு வழியின்றி எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மற்றும் செவ்வியல் இலக்கியப் படிப்பில் சேர்ந்தார். சில நாட்களிலேயே தனக்குப் பொருத்தமில்லாத படிப்பில் சேர்ந்ததை நினைத்து நொந்துபோனார். பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் லண்டன் மாநகருக்குச் சென்று, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சில மாதங்கள் செயல்பட்டார்.

ஒருமுறை லண்டனுக்குச் செல்வதற்காக மான்செஸ்டர் ரயில் நிலையம் சென்றார். ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு புத்தம் புதிய சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. ஒரு முழு நீளத் திரைப்படம்போல் உருவான அந்தக் கதைச் சித்திரம் அவருக்குள் புதிய உணர்வலைகளை எழுப்பியது. வீட்டுக்கு வந்த உடன் அதனைப் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கிவிட்டார்.


அவர் தனது நாவலை எழுதத் தொடங்கிய நேரத்தில், அவரது அம்மாவின் உடல் நலம் மோசமானது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்து, அரவணைத்துப் பாதுகாத்துவந்த தனது தாயாரின் மறைவு வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எழுத்துப் பணியையும் தொடர முடியவில்லை.

ஒரு மாற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள போர்டோ நகருக்குச் சென்று, அங்கு ஆங்கில ஆசிரியராக இரவு நேரப் பணியில் சேர்ந்தார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித் தள்ளினார். அங்கு, தான் சந்தித்த, தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர் ஒருவரை மணந்துகொண்டார். மகள் பிறந்தாள். மண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவரால் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார்.

இங்கிலாந்திலும் உதவுவதற்கு யாரும் இல்லை. தந்தை மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். தங்கையாலும் பெரிய உதவி செய்ய முடியவில்லை. பழைய நண்பர்கள் சிலர் சிறிதளவு பண உதவி செய்திட முன்வந்தபோதும், அதனை கைநீட்டி வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, தனது கைக் குழந்தையுடன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

 தனது முழு சக்தியையும் திரட்டி முதல் பாகத்தை எழுதி முடித்தார். தனக்கு முழு திருப்தி ஏற்படும் வரை அதனை மெருகேற்றி, மிகுந்த நம்பிக்கையோடு பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். ‘பதிப்பிக்கத் தகுந்ததல்ல’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது அந்த நாவல்.  11 பதிப்பகங்கள் நிராகரித்த நாவலை, மனம் தளராமல் 12-வது பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்.

பதிப்பாசிரியர் படிக்கத் தொடங்கியபோது, அவரது 8 வயது மகளும் அதனைப் படிக்கத் தொடங்கினார். அந்தச் சிறுமி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தருமாறு தனது அப்பாவிடம் கெஞ்சியபோது அந்த நாவல் குழந்தைகளைக் கவரும் என்று பதிப்பாசிரியர் புரிந்துகொண்டார். அவரை அழைத்து பதிப்பு ஒப்பந்தம் போட்டார். எதிர்பாராத மாபெரும் வரவேற்பைப் பெற்றன ஹாரி பாட்டர் நாவல்கள்

எழுத்தின் மூலமாக மட்டுமே 6,000 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சம்பாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்.

வியாழன், 26 மார்ச், 2020

மோட்டார் சைக்கிள்

அந்த 18 வயது இளைஞனுக்கு
டொயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது கனவு. “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று திட்டினார் அவனது அப்பா. “தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்​டக்காரன்” என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள்.  அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கி இரவு பகலாக உழைத்தார்.
 
ஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள்.


ஆனால் மனம் தளராமல் மீண்டும் முயற்சித்து, விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “அருமை” என்று பாராட்டி ஏற்றுக்​கொண்டது. தயாரிப்புக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார். 

அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு.  ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது.

கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, அந்த தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார்.   


இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். மனமுடைந்து வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று அவருக்கு ஒரு புத்தம் புது ஐடியா பளிச்சிட்டது. 

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார். புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய​போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.


இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார். கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை.  தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர்.  ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

புதன், 25 மார்ச், 2020

சப்தமில்லாத இசை

மொஸார்ட் எனும் மாமேதை அப்பொழுது இசை சாம்ராஜ்யத்தின்  உச்சத்தை அடைந்துகொண்டு இருந்தார். தன்னைப் போல தன் மகனும் ஆகவேண்டும் என்று நிற்க வைத்து மணிக்கணக்காக இசைப்பயிற்சி தந்தார் தந்தை. கால் வலிக்கிறது என்று சின்ன பையன் அழுதால் முட்டியை அடியால் பெயர்த்து விடுவார். கை விரல்களின் நடுவே பிரம்பால் அடித்து சித்திரவதையின் மூலம் இசைப்பெருக்கை கொண்டு வந்து விட அவர் முயன்ற தருணங்களில் எல்லாம் அந்த சிறுவன் உள்ளுக்குள் குமுறினான்.


6-வது வயதில் அவனது முதல் இசை நிகழ்ச்சிக்கு தந்தை ஏற்பாடு செய்தார். இசைத் துறையில் இவர் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக 10 வயதிலேயே பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டது. 17 வயதில் இசை நிகழ்ச்சி நடத்த மேற்கத்திய இசைக்குப் பிரபலமான வியன்னாவுக்கு சென்றான். ‘சிம்பொனி இசையின் தந்தை’ என்று போற்றப்பட்ட ஜோஸப் ஹைடனிடம் இசை கற்றான்.

மொஸார்டுடன் இணைந்து இசைப்பணியாற்ற கிளம்பிய அவர் அம்மா இறந்து போனதால் வீட்டுக்கு திரும்ப நேரிட்டது. தந்தை இன்னமும் மோசமாக குடிக்க ஆரம்பித்து இருந்தார். இரண்டு தம்பிகள் வேறு இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் இசைப்பயணத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்தார். 


சில காலம் கழித்து, மீண்டும் இசைக்க ஆரம்பித்து எண்ணற்ற அற்புதமான கோர்வைகளை தந்தார். அவரின் ஒரு சில இசைக்கோர்வைகளை உருவாக்க எட்டு வருடங்கள் கூட எடுத்துக்கொண்டார் என்பது அவரின் அசாத்திய உழைப்பை காட்டும். எத்தனையோ இசைக்கோர்வைகள் வந்தாலும் அவருக்கு மனதில் நிம்மதி உண்டாகவே இல்லை.

இருபத்தி ஆறு வயதில் அவரின் காதுகளில் மணி யடிப்பது போல தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. படிப்படியாக காது கேட்காமல் போனது. டின்னிடஸ் எனும் அரிதான நோய் அது. போர்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த
மன்னர்கள் அவரை கவனித்துக்கொள்ளவில்லை. வருமானத்துக்கு வழியில்லாமல் தன்னுடைய இசைக்கோர்வைகளை மிக சொற்ப விலைக்கு விற்றார் அவர்.

முழுமையாக காது கேட்காமல் போன பிறகு நடந்த முதல் இசை நிகழ்ச்சி பெருந்தோல்வியில் முடிந்தது. அவரின் இசைக்கோர்வைகள் எப்படி தங்களை உத்வேகப்படுத்தின என்று நண்பர்கள் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப் படித்து மீண்டும் இசைக்கலாம் என்று கனத்த மவுனத்துக்கும், சோகத்துக்கும் நடுவில்  வந்தார்.

பல்லாயிரம் பேர் நின்று கொண்டு இருந்தார்கள். இசைக்கருவியை தொட்ட பொழுது வெறுமை மட்டுமே அவரை சூழ்ந்திருந்தது. சுற்றியிருந்த எதுவுமே கேட்கவில்லை! ஒவ்வொரு கட்டையாக அழுத்திய பொழுது எழுந்த அதிர்வை மட்டுமே கொண்டு இசைத்தார் அவர்.


வாசித்து முடித்ததும் கூர்மையான விமர்சனப்பார்வை கொண்ட கூட்டத்தின் எல்லாரும் எழுந்து நின்று அவரின் இசைக்கு எல்லாரும் கைதட்டிய பொழுது பொங்கி அழுதார்.
அதற்கு பிறகு மிகப்புகழ் பெற்ற இசைக்கோர்வைகளை உருவாக்கி தள்ளினார் அவர்.

அவரின் இசை காலங்களை கடந்து மொஸார்ட்டின் கோர்வைகளுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது.  அவரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு நூற்றாண்டுகளை கடந்து அவரை நினைக்க வைக்கிறது. சோகங்களை தன்னுடைய கலையில் தோய்த்து கொடுத்த மகா கலைஞன் லுடுவிக் வான் பீத்தோவன்


செவ்வாய், 24 மார்ச், 2020

முதல் கலைப் பயணம்

ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக  1889-ஆம் ஆண்டு பிறந்தான் சார்லஸ்ஸ்பென்சர். அவனது தாய் ஹென்னா, லண்டன் மதுவிடுதிகளில் பாட்டுப் பாடும் பெண்.

இசை நிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். ஒரு நாள்மேடையில் பாடும்போது அவன் அம்மாவிற்குத் தொண்டையில் பிரச்னை; அவளால் பாட முடியவில்லை! அதனால் ரசிகர்கள் ஒரே கூச்சலிட்டனர்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா.


அப்போது ஆறு வயது சிறுவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே வேகமாக மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்காது!

தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். ரசிகர்களின் விசில் சத்தத்தாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது! மேடையை நோக்கிச் சில்லறைகள் சீறிப் பறந்தன. சிறுவன் உடனே பாடுவதை நிறுத்திவிட்டுச் சில்லறைகளைப் பொறுக்கினான். கூட்டமோ அவனைப் பாடச் சொல்லி கூச்சலிட்டது !


ஆனால் சிறுவனோ சிறிதும் சளைக்காது ‘சிறிது நேரம் பொறுத்திருங்கள். சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!’ என்று கூறிவிட்டுச் சில்லறைக்காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான். கூட்டத்தினர் சிரித்தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி… 

வறுமை, பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரையும் அவன் சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் வாய்ப்பு வந்தது. அங்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை நோக்கி, ‘ஏய்!அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான்... வந்துகொண்டிருக்கிறான்!’ என்று தன்னை மறந்து கத்தினான்.


அடுத்த ஐந்தாண்டுகளில் அவன் கூறியதே நடந்தது. அவன் அமெரிக்காவை மட்டுமல்லாது இந்த உலகத்தையே கொள்ளையடித்தான்.

ஒரு நாள் நடிக்க வாய்ப்புக் கேட்ட அவனை பார்த்து சென்னட் என்ற தயாரிப்பாளர் “ஏதாவது நடித்துக்காட்டு” என்று கூறினார். அவனின் உடல் வாகுக்கு ஏற்ற உடைகள் அங்கு இல்லை என்பதால், பெரிய அளவுள்ள தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு, தொப்பி, கைத்தடி. ஆகியவை கொடுக்கப்பட்டது. தனக்குக் கிடைத்ததை வாங்கி அணிந்து கொண்டார். அவரது தோற்றத்தைப் பார்த்தவுடனேயே தயாரிப்பாளருக்குச் சிரிப்பாக வந்தது. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளின் உருவ முத்திரை!

திங்கள், 23 மார்ச், 2020

ஆசிரியரிடம் வாங்கிய திட்டு

அவர் திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர். செட்டிநாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விழாவிற்கு பேச்சாளராக அவரை அழைத்திருந்தார்கள். அவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டார்.

இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், அமராவதிபுதூர் என்ற கிராமத்தை தாண்டிதான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள குருகுலம் ஒன்றில்தான் அவர் படித்தார். மகாத்மா காந்தியே ஆசீர்வாதம் செய்யப்பட்ட குருகுலம் அது.

இந்த கிராமத்திற்குள் கார் நுழைந்தது. அப்போது தான் படித்த பள்ளியை அங்கு பார்த்தார். உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டார். காரை விட்டு கீழே இறங்கி அந்த பள்ளியின் வாசலில் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

 அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இருந்தவர்கள், தெருவில் போனவர்கள் எல்லாம் அவரை பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். விழாவுக்கோ நேரம் ஆகி கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் கேட்டார்கள், "என்னாச்சு.. ஏன் இப்படி உட்கார்ந்துட்டீங்க?" என்றனர். அதற்கு அவர், "இல்லை.. நான் இங்க படிக்கும்போது என் வாத்தியார், நீ உருப்பட மாட்டே... உருப்பட மாட்டே...ன்னு எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தார்... இப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? எனக்கு தெரியலையே..." என்றார்.

இதுக்கு என்ன பதில் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. திரும்ப திரும்ப "நான் உருப்பட்டுட்டேனா.. இல்லையா"... என்று கேட்டு கொண்டே இருந்தார். அவர் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஊர்முழுக்க தெரிந்துவிட்டது. சிலர் ஓடிப்போய் அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடமே தகவல் சொன்னார்கள். உடனே வாத்தியாரும் பள்ளியை நோக்கி வந்தார். அவ்வளவு நேரம் ரோட்டில் உட்கார்ந்து சத்தமாக வாத்தியாரை பற்றி பேசிக் கொண்டிருந்தவர், தூரத்தில் ஆசிரியர்  வருவதை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார். வாத்தியார் கிட்ட வர வர கை கால் எல்லாம் வெடவெடவென உதறியது.

வாத்தியார் கிட்ட வந்து நின்றதும், தன் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டார். இப்போது வாத்தியார் பேசினார், "என்னப்பா... முத்து.. ஏன் இப்படி கீழே உட்கார்ந்துட்டு இங்கே சின்ன பிள்ளை மாதிரி என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றார். அவர், "ஒன்னுமில்லீங்க ஐயா...." என்றார்.

அதற்கு வாத்தியார், "இல்லையே... உன் சமாச்சாரம் வந்து சொன்னார்கள். நான் உன்னை சின்ன வயசுல உருப்பட மாட்டேன்னு சொன்னதைதானே கேட்டே? உன் ஆசிரியர் நான். உன் மேல் உரிமை எடுத்து என்னை தவிர வேறு யார் பேசமுடியும்? ஆசிரியர் திட்டினாலும் பெற்றோர் திட்டினாலும் அது பலிக்காது. அது உங்கள் நல்லதுக்காகத்தானே தவிர வேறு எதுக்காகவும் இல்லை. உன்னை நினைச்சு தினம் தினம் நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன். அங்க பார்... விழாவுக்கு நீ வரப்போறன்னு... உனக்காக ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்காங்க. எத்தனை பேர் உன் பேச்சை கேட்க குவிஞ்சு கிடக்கிறாங்க... முதலில் விழாவுக்கு போ... நானும் உன் பேச்சை கேட்க பின்னாலயே வர்றேன்" என்றார்.


ஆசிரியர் பேச பேச அவருக்கோ புல்லரித்து போனது. விளையாட்டுக்காக அப்படி கேட்டிருந்தாலும், தன் ஆசிரியரை நேரில் பார்த்ததும், அவருக்கு உரிய மரியாதை அளித்த விதத்தை கண்டு எல்லோருமே திகைத்து நின்றார்கள். மளமளவென பேசி கொண்டிருந்தவர், தன் ஆசிரியரிடம் வாயடைத்து நின்றதையும் கவனித்து கொண்டு நின்றார்கள். கடைசியில் விழாவுக்கு கிளம்பி செல்லும்போது தன் ஆசிரியரின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி சென்றதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு நின்றார்கள்.

அந்த வாத்தியாரால் "முத்து" என அழைக்கப்பட்டவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருந்து வந்தது. அவ்வாறு சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்டார். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் நடிப்பு அவருக்கு கை கொடுக்கவில்லை.

பிறகு நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளியான திருமகள் என்ற பத்திரிகையில், 'பிழை திருத்துநர்' வேலை கேட்டுச் சென்றிருந்தார் அவர். நேர்காணலின்போது, அந்த பத்திரிகையின் அதிபர், 'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதிலும் 'தாசன்' என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை தான். கிடைத்த சில வினாடிகளில் 'கண்ணதாசன்' என்று பதில் கூறினார். முத்தையா கண்ணதாசன் ஆனது இப்படித்தான்.

வெள்ளி, 20 மார்ச், 2020

எழுத்தாளரும்... சிகரெட்டும்...

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். தனக்கு இருந்த நீண்ட கால புகை பழக்கத்தை நிறுத்திய விதம் பற்றி அவர் விவரித்த பதிவு இது :

"என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி. (M.I.T) ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும் போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்த பழக்கம் என்னோடு ஒட்டிக்கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம் போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்து காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்து சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வபோது ‘ச்சே’ என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சில சமயம் பிப்ரவரி வரி நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதி வரை.


பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் “நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்றார்.

“ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை” என்றார். “கைவிடாவிட்டால் என்ன ஆகும்?” என்றேன். “ஹார்ட் அட்டாக்… லங் கேன்சர்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?”

இந்த முறை பயம் வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து அனைத்து நண்பர்களிடமும், “நான் சிகரெட்டை நிறுத்திவிட்டேன்” என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன்.


சிகரெட் பழக்கம் என்பது பைனரி.  கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும். இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து 8 என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது.

 முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர்குடிக்க வேண்டும். சிகரெட்டுக்கு பதிலாக பாக்கு, பான்பராக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தமமானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப்படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்.. சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்.. இப்படி, மெள்ள மெள்ளநண்பர்களிடம், மனைவியிடம் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம். போஸ்டர் கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டி விட்டீர்கள். சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன். அதாவது சிகரெட்டை நிறுத்துனஅஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்கு போய்விடுவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டிவிட்டால் பழக்கம் போய்விடுகிறது”

இந்த எழுத்தாளர் யார் என கண்டுபிடித்து விட்டீர்களா? அவரை பற்றிய சில குறிப்புகள் :

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் இவரும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள்.

கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று இவர் தொடாத துறைகளே இல்லை!

தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார்.

இவரது பல கதைகள் படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இவர் பல திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.


இவர் யார் என்பதை கண்டுபிடித்திருந்தால், உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

இவர் - எழுத்தாளர் "கலைமாமணி" சுஜாதா ரங்கராஜன்