dad லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dad லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 நவம்பர், 2021

வாழ்க்கையை மாற்றிய வேலை

 வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரில் அலாய்ஸ் என்பவர் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அலாய்ஸ்க்கு குடிப்பழக்கம் இருந்ததால், குடும்பத்தினர் மீது அடிமைத்தனத்தை திணித்தார். பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்காமல், விசில் அடித்தால் ஓடிவந்து நிற்குமாறு உத்தரவிட்டிருந்தார். அவரைப் பார்த்தாலே குழந்தைகள் மிரண்டு போவார்கள்.

இவரது 3வது மனைவிக்கு பிறந்த 4வது மகன் மட்டும் மற்றவர்களைப் போல் இல்லாமல், பிறந்தது முதல் மிகவும் மெலிந்து, நோய்வாய்ப்பட்டு வலுவின்றி காணப்பட்டான். பின்னர் படிப்படியாக உடல் தேறியது. தந்தை அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதால், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தான் அந்த சிறுவன். பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெறும் அளவிற்கு நல்ல படிப்பாளி. திடீரென அவனுக்கு ஓவியத்தின் மீது நாட்டம் வந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வம் குன்றியது. தனது ஓவியம் வரையும் திறமையை பட்டை தீட்டிக் கொண்டான்.



இந்த சூழலில் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை காலமானார். அதன் பிறகு கண்டிப்பு காட்ட யாரும் இல்லாததால், அந்த சிறுவனுக்கு முரட்டு குணம் தொற்றிக் கொண்டது. ஆசிரியர், மாணவர் என பேதம் பார்க்காமல் அனைவருடனும் சண்டையிட்டார்.

18வது வயதில் தாயிடம் சிறு தொகை வாங்கிக் கொண்டு, ஓவியராக வேண்டும் என்ற ஆசையில் வியன்னாவிற்கு ரயிலில் ஏறினார். அங்கு ‘Art Academy’ சேருவதற்கு நுழைவுத் தேர்வில் தோற்றார். அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சிக்கையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையில் தாயும் இறந்து போக தனிமையாகிப் போனான்.

பின்னர் தனது ஓவியங்கள் மூலம் பிழைப்பு நடத்தினான். சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தான். அந்த சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை காதலித்து, தோல்வியுற்றான். இந்த காலக்கட்டத்தில் நாளிதழ்களை தினமும் படிக்கும் பழக்கம் வந்தது. இதன்மூலம் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து பிழைப்பு தேடி ஜெர்மனிக்கு சென்றான். அங்கு ஓவியத்தால் சாதிக்க முடியவில்லை. எனவே ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக எதையாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ராணுவ வீரராக மாறினான். அந்த பணி அவன் வாழ்க்கையையும், உலக சரித்திரத்தையும் மாற்றும் என்பது அவனுக்கு அப்போது தெரியாது.

முதல் உலகப்போரில் ஜெர்மனி படையில் ஒரு சாதாரண ராணுவ வீரர், இரண்டாம் உலகப் போரில் உலகையே நடுங்க வைத்த ஜெர்மனியின் அதிபர் ஆனார். ஆம்... அவர் தான் அடால்ப் ஹிட்லர்.




செவ்வாய், 31 மார்ச், 2020

அப்(பப்)பா...

ஜோசஃப் ஒரு தோற்றுப் போன இசைக் கலைஞன். அதனாலேயே தன்னுடைய புதல்வர்கள் பெரும் இசைக் கலைஞர்களாக வர வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். இதற்காக ஜோஸஃப் தன் மகன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நடனத்தில் ஒரு அடி பிசகினாலும் பெல்ட்டால் அடித்தார். அந்தச் சிறுவர்கள் அவரைப் போலவே இசையில் அதீதமான திறமையைக் கொண்டிருந்தும் அவர் கடுமையான பயிற்சி அளித்து வந்தார்.

இசையிலும் நடனத்திலும் தான் கொடுக்கும் கடும் பயிற்சிகளுக்காக ஜோஸஃப் தன் மகன்களை மற்ற பையன்களைப் போல் விளையாட அனுமதிக்கவில்லை. ஓய்வெடுக்க விடவில்லை. இரவும் பகலும் எந்நேரமும் பயிற்சியிலேயே அவர்களை ஈடுபட வைத்தார்.


அவரது மகன்கள் நால்வரும் நடனம், பாடல் மற்றும் இசைக் கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது கடைசி மகனை மட்டும் ஜோசஃப் தங்கள் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘நீ சிறுவன் ’ என்று சொல்லி மறுத்து விடுகிறார். அப்போது  அவன் வயது நான்கு. பிறகு ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் அவன் முதல் பரிசு வாங்கியதும்தான் அவனையும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். அதுவும் பாடகனாக அல்ல; ட்ரம்ஸ் வாசிப்பவனாக. பிறகு ஏழு வயதில்தான் மேடையில் தங்களது இசை குழுவில் பாட ஆரம்பித்தார்.

ஏழு பிள்ளைகளும் மனைவியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேருக்கு ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வாழ்ந்தபடி தன் பிள்ளைகளின் இசைப் பயிற்சிக்காகவும், பிறகு அவர்களைக் கொண்டு தான் அமைத்த  இசைக்குழுவுக்காகவும் ஒருமுறை பெரும் அளவிலான இசைச் சாதனங்களை வாங்கி வருகிறார் ஜோசஃப்.

”நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டு சண்டை பிடிக்கும் மனைவியின்  ஆட்சேபணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, தன் குழந்தைகளின் இசைக் குழு நாடெங்கும் பிரபலமாக வேண்டும். அவருடைய கனவு  இசைக் குழு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நிறைவேறி விடுகிறது. தாங்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் பரிசுகளைக் குவிக்கிறார்கள் ஜோஸஃபின் குழந்தைகள். 


ஒன்பது வயதிலேயே கடைசி மகனுக்கு ஒரு பிரபல பாடகனுக்குக்கு உரிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. இதற்கு அவனது திறமை தவிர, ஜோஸஃபின் இடைவிடாத உழைப்பும், தன் குழந்தைகள் மீது அவர் வைத்த தீவிர நம்பிக்கையும்தான் காரணம்.

அதனால்தான் அப்போது உலக அளவில் முன்னணிப் பாடகியாக இருந்த டயானா ராஸ் ஒன்பதே வயதான அந்த சிறுவனுடன் மேடையில் ஒன்றாகப் பாடினார். அவனது வாழ்க்கையில் நடந்த அந்த மிக முக்கியமான சம்பவம் உலகின் பிரசித்தி பெற்ற இசை அரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில் (நியூயார்க்) நடந்தது. அவர்களது இசை குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டவரும் டயானா ராஸ் தான்.


16 வயது முதல் சோலோவாக ஆல்பம் தயாரித்து வந்தார். இவருடைய உச்சம், 1982ல் அதாவது தன் 24 வயதில் வெளியிட்ட த்ரில்லர் ஆல்பம். இன்று வரை உலகில் அதிகம் விற்கப்பட்டு கின்னஸில் இடம்பிடித்த இசை ஆல்பம். 6.5 கோடி காப்பிகள். அவருடைய அத்தனை ஆல்பங்களும் இதுவரை 20 கோடி காப்பிகள் விற்றுள்ளன (1700 கோடி ரூபாய்க்கு விற்பனை). எந்த இசைக் கலைஞனாலும் எட்ட முடியாத சாதனை இது.

தனது பிராண்ட் பெயர் மூலமாக அவர் சம்பாதித்தது 2500 கோடி ரூபாய். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் வருடத்துக்கு 250 கோடியை மிக எளிதாக சம்பாதித்து வந்தார். 


ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக அவர் இழந்தது மிகவும் அதிகம். “இரவு இரண்டு மணிக்கு என் அப்பா எங்களை எழுப்புவார். மூன்று மணிக்கு ஏதாவது ஒரு க்ளப்பில் இசை நிகழ்ச்சி இருக்கும். இப்படி எல்லா அமெரிக்க நகரங்களிலும் பாடி இருக்கிறேன். அப்போது என் வயது ஏழு இருக்கும்” என்கிறார் மைக்கேல் ஜாக்சன்.